கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
பிக் பாஸ்
மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் துவக்கியுள்ளது. இதுவரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க தயாராகிவிட்டார். அதற்கான புரொமோ வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
புரொமோ வெளியீடு
சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் கமல்ஹாசன், முதலில் கொரோனா அச்சுறுத்தல்கள் பற்றி பேசுகிறார். மேலும் அவர் பேசுகையில், மருந்தை கண்டு பிடிக்காத ஒரு நோய், இந்த உலகம் ஒரு கிராமம் என உணர்த்தி இருக்கிறது. எங்கேயோ அமேசானில் தீப்பிடித்தால், இங்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்கு போகாவிட்டால், சங்கிலித் தொடராக நம்மை நம்பி இருக்கும் பலர் 5 மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வேலை இல்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளபடி பாதுகாப்பாய் இருக்கும். அனைத்திற்கும் நாமே தீர்வு! இதோ நான் வந்துவிட்டேன். நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள், நாமே முன்னெடுப்போம், புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை எனக் கூறி வேலையை ஆரம்பிக்கலாமா என்று கேட்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த புரொமோ வீடியோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.