வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை 10 செ.மீ., நத்தம், வைகை அணையில் தலா 7 செ.மீ., திண்டுக்கல், நிலக்கோட்டை, மைலம்பட்டி பகுதிகளில் தலா 6 செ.மீ., அம்பாசமுத்திரம் 5 செ.மீ., ஆண்டிபட்டி, திருப்பத்தூர், தரமணி, செஞ்சி, நாமக்கல், அறந்தாங்கி, கள்ளிக்குடி, மலையூர், கலசப்பாக்கம், முண்டியம்பாக்கம் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேன்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.