வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேடசந்தூர் 13 செ.மீ., முசிறி 9 செ.மீ., க.பரமத்தி, தோவாலாவில் தலா 8 செ.மீ., வேப்பந்தட்டை, மருங்காபுரி பகுதிகளில் தலா 7 செ.மீ., பரமத்தி வேலூர் 6 செ.மீ., விராலிமலை 5 செ.மீ., சோலையார், முண்டியம்பாக்கம், வீரகனூர் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாயுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.