செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 1ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 4ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இம்மாத இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது. 
மெட்ரோ ரயில் சேவை
ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பள்ளி மற்றும் கல்லுாரிகள் அடுத்த மாதம் திறக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சினிமா தியேட்டர்களில் சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் அதிபர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபார ரீதியாக பலன் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















































