‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த்துடன் யோகி பாபு இணையப் போவதாக தகவல் வெளி வந்துள்ளது.
முன்னணி நடிகர்
1990களில் வலம் வந்த முன்னணி நடிகர்களில் பிரசாந்தும் ஒருவர். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அறிமுகமான பிரசாந்த், செம்பருத்தி படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவருக்கு என்றுமே வெற்றிப்படமாக திகழ்வது ‘ஜீன்ஸ்’ தான். இயக்குநர் ஷங்கரின் படைப்பில் நாசர், ஐஸ்வர்யா ராய், லட்சுமி என்று நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நிறைந்திருந்தன. இப்படத்திற்கு பிறகு கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை, ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், ஸ்டார், சாக்லேட், மஜ்னு, வின்னர் என்று வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்தார். 2006 ஆம் ஆண்டு வெளியான தகப்பன்சாமி என்ற படத்திற்கு பிறகு, பட வாய்ப்புகள் குறைந்ததால் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியே காணப்பட்டார். மீண்டும் 2011 ஆம் ஆண்டு பொன்னர் சங்கர் என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் பிரசாந்த். அவரது தந்தையான தியாகராஜன் அப்படத்தை தயாரித்து இயக்கினார். இப்படத்தின் மூலம் சினிமாவில் தன்னை நிலைநாட்டி கொள்வார் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரசாந்த் ரசிகர்களுக்கு, அவர் வெற்றிப்படங்கள் என்று எதையுமே சரியாகக் கொடுக்காதது பெரிய வருத்தத்தை கொடுத்தது.
அந்தாதுன் உரிமை
ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்தப் படம் 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒரு பிளாக் பஸ்டர் படமாகவே அமைந்தது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பல விருதுகளை வாரி குவித்த இத்திரைப்படம், மூன்று தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. 320 மில்லியன் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘அந்தாதுன்’ திரைப்படம், கிட்டத்தட்ட 4.56 பில்லியன்களை வசூலித்து உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. பல முன்னணி நடிகர்கள் இப்படத்தின் உரிமையை பெற முயன்ற போதிலும் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனுக்கு கிடைத்தது. ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கப் போவதாகவும், தயாரிப்பு பணிகள் தொடங்கி இருப்பதாகவும் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம்
‘அந்தாதுன்’ திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதுவும் தபு கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. அதனால் தமிழ் ரீமேக்கிலும் அந்த அளவிற்கு கெத்தான ரோலில் நடிப்பதற்கு நடிகர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றார். அப்படத்தில் மாடல் பணக்கார நடுத்தர வயதுப் பெண்ணாக நடித்திருக்கும் தபு, யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்காத கொடூர வில்லியாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார். அதனால் இப்படத்தில் தமிழில் யார் நடிப்பார்கள் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை அணுகி உள்ளனர். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் நோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியானது. ‘அந்தாதுன்’ படத்தில் தபுவின் கணவராக கார்த்திக் நடிக்கப் போவதாகவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ‘அந்தாதுன்’ படத்தில் நடிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக அது ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை.