சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை வாங்க OTT தளங்கள் போட்டிப் போட்டு கொண்டிருக்கின்றன.
OTT ஆதிக்கம்
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுமா? அப்படியே திறந்தாலும் மக்கள் கூட்டம் முன்பைப் போல வருமா? போன்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற OTT தளங்கள் முயன்று கொண்டு வருகின்றன. ஏற்கனவே ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் OTTயில் வெளியாகி, தியேட்டர் உரிமையாளர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
OTTயில் ரிலீசா?
இந்த நிலையில், அமேசான் பிரைம் தளத்தில் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு ரூ.60 கோடி, படத்தின் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ஆகியவை சுமார் 40 கோடி என மொத்தம் ரூ. 100 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது பல முண்ணனி நடிகர்களின் படத்தை OTTயில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனை வாங்க பல OTT தளங்களும் போட்டிப் போட்டு கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் OTT பேரத்தில் முதல் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் என எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, இந்த செய்தி சற்று அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.