சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTT தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘சூரரைப் போற்று’

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஷாக்கி ஷாரூப், சம்பத், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.15 கோடி மதிப்பில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தொடர்பாக பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

சூர்யா விளக்கம்

இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட உள்ளதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது காலம் அனுமதிக்காத காரணத்தால், படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ‘அமேசான் பிரைம் வீடியோ’ மூலம் இணையம் வழியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். மேலும் ‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் நடிகர் சூர்யா கூறியிருந்தார்.

கடும் எதிர்ப்பு

ஏற்கனவே சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்யப்பட்டதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யா குடும்பத்தினர் சார்ந்த எந்த ஒரு திரைப்படத்தையும் திரையிட மாட்டோம் எனக் கூறியிருந்தனர். இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் நடிகர் சூர்யா மீண்டும் OTTயில் படத்தை ரிலீஸ் செய்வது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சூர்யாவின் இந்த முடிவிற்கு தியேட்டர் உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியம், கொரோனாவால் தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் வேலையில், சூர்யா எடுத்துள்ள முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்து விடும் எனத் தெரிவித்தார். இது தவறான முடிவு என்றும் இதுபோல் தங்களுக்கும் தியேட்டரில் என்ன படத்தை திரையிடுவது என்று முடிவு எடுக்க உரிமை இருப்பதாகவும் கூறியுள்ளார். சூர்யா திரையுலகுக்கு தவறான வழியை காட்ட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here