கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு
லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில், அவரது சீராக இருப்பதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
கொரோனா நெகட்டிவ்
எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி. சரண், தினசரி வீடியோக்களை வெளியிட்டு தகவல் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் நலமுடன் இருப்பதகாவும், தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தனது தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி எனவும் சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதை அறிந்த திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.















































