வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்குப் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரவலாக மழை
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புள்ளம்பாடி 12 செ.மீ, கல்லக்குடி, திருத்தணி தலா 11 செ.மீ, வேப்பந்தட்டை, பெரம்பலூர், அம்முடி தலா 10 செ.மீ, கரூர், புவனகிரி தலா 9 செ.மீ, சோளிங்கர், பொன்னை தலா 8 செ.மீ, தம்மம்பட்டி, அரியலூர், திருப்பட்டூர், ஆர்.கே.பேட்டை தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.