மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி நகரில் வசிப்பதை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் தாவூத்
88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிப் பரிமாற்ற தடைவிதித்து பாகிஸ்தான் விடுத்த அறிவிப்பில் தாவுத் இப்ராஹிம் பெயரும் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு பிறகு பாகிஸ்தானில் மறைந்து வாழும் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உதவியுடன் அங்கிருந்தபடியே தடையின்றி தனது கிரிமினல் பணிகளை மேற்கொண்டு வந்தார். பாகிஸ்தானில் தாவூத் இம்ராஹிம் இருக்கிறார் என இந்தியா தொடர்ந்து கூறி வந்த போதிலும், பாகிஸ்தான் இல்லவே இல்லை என மறுத்து வந்தது. இப்போது அதனை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, அவர் இருக்கும் வீட்டு விலாசத்தையும் வெளியிட்டுள்ளது. கராச்சியில் உள்ள க்ளிஃப்டனில், சவுதி மசூதி அருகே உள்ள ஒரு பங்களாவில் தாவூத் இப்ரஹீம் வசிக்கிறார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் விலாசத்துடன் வெளியிடும் செய்தியை வைத்து பார்க்கும் போது, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் நாட்டில் தான் இருக்கிறார் என்பது தெரிகிறது.
நிதிப் பரிமாற்றத்திற்கு தடை
பாரீஸைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிரான நிதியுதவி தடுப்புகுழு, கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்தது. தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதிஉதவி செல்வதைத் தடுக்காவிட்டால், அவர்களுக்கு தடை விதிக்கப்படாவிட்டால் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இருக்கும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கையை 2019ம் ஆண்டு இறுதிக்குள் எடுக்கப்போவதாகவும் கெடு விதி்த்திருந்தது. ஆனால், கொரானா வைரஸ் பிரச்சனை காரணமாக இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் அரசு 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடுமையான நிதிப் பரிமாற்றத் தடையை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரு அறிவிப்புகளாக இந்த தடை உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்தது.
ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
இந்த தடை உத்தரவில் ஹபிஸ் சயீத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோரின் பெயர்களும் அவர்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகமான நி நியூஸ் தெரிவி்த்துள்ளது. இதில் தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசித்து வருவதற்கான முகவரியையும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட அந்த உத்தரவில், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மற்றும் அதற்கு காரணமான ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் சயீத், ஜெய்ஷ் இ முகமது தலைவர் அசார், ஹக்கானி குரூப், அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளின் சொத்துக்கள், வீடுகள், வங்கிக்கணக்குகள் போன்றவை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சயீத், மசூத் அசார், முல்லா பஸுல்லா, ஜாகியுர் ரஹ்மான் லக்வி, முகமது யாயா முஜாஹித், அப்துல் ஹக்கிம் முராக், இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் நூர் வாலி மசூத், உஸ்பெகிஸ்தான் புரட்சி இயக்கத்தைச் பஸல் ரஹீம் ஷா, தலிபான் தலைவர்கள் ஜலாலுதீன் ஹக்கானி, கலில் அகமது ஹக்கானி, யாயா ஹக்கானி, இப்ராஹிம் ஆகியோரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.