மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இ பாஸ்
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த் தொற்று பரவுவதை தடுக்க திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல் வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக, புதிய தளர்வுகளுடனான இ-பாஸ் நடைமுறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்து வருகிறது.
இ-பாஸ் தேவையில்லை
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது; மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை. மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.