பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் ஆகியோரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று

லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், சுவாசிக்க உதவும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஹெச். வசந்தகுமாரும் கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை கவலைக்கிடம்

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். அதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அவரது உடல்நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று நல்லகண்ணு வீடு திரும்புவார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here