மிர்ச்சி விஜய்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதையொட்டி அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குட்டி ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
ஆண் குழந்தை
டிவி தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர் ஆர்.ஜே என பல திறமைகளுடன், கலகலப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்.ஜே. விஜய். ரேடியோ மிர்ச்சியில் பிரபலமான விஜய், தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகி தனது அடுத்தக்கட்ட வாழ்க்கையை தொடங்கி உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி விஜய்க்கும், மோனிகா தங்கராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கலர்ஸ் தமிழ் சேனலில் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சியை நடிகர் சிவா தொகுத்து வழங்கினார். அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் அதைவிட பிரபலப்படுத்தி அனைவரின் மனதிலும் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தார்.
குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்
ஆண் குழந்தை பிறந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்கிறேன்’ என்று கூறி திருமண புகைப்படத்தை முதலில் பதிவிட்டுள்ளார். பிறகு தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும், அதன்பிறகு வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வரிசையாக பதிவிட்டுள்ளார். கடைசியாக தனக்கு குழந்தை பிறந்த செய்தியை அழகான குழந்தை கால்களை வைத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ‘ஒரு குட்டி வந்தது தான் சார் ஸ்டோரியே’ என்று தனது பாணியில் காமெடியாக கூறியுள்ளார். குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத விஜய், குழந்தைக்கு “நவிலன்” என்ற பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவரது இந்த பதிவிற்கு பல நட்சத்திரங்களும், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.