அரசியலில் கமல்ஹாசன் LKGயில் கூட சேரவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தீவிர அரசியல்
நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலையும் சந்தித்துவிட்டார். அந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், சென்னை உள்பட சில முக்கிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. தற்போது கட்சியை பலப்படுத்தும் பணியில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட்டு மக்களின் நன்மதிப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் விமர்சனம்
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறைவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சென்னை தலைநகராக இருந்தாலும், அரசியல் தலைநகரமாக மதுரை திகழ்வதாக கூறினார். திருச்சியை தலைமையிடமாக எம்ஜிஆர் அறிவிக்க முயன்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதாகவும், பின்னர் மதுரையை 2வது தலைநகராக மாற்ற விரும்பினார் என்றும் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் சார்ந்த முடிவுகளை மதுரையில் வைத்தே எடுப்பார் எனவும் எம்ஜிஆர், ஜெயலலிதா வலியுறுத்திய கருத்தையே அமைச்சர் உதயகுமாரும் வலியுறுத்தியதாகவும், அதனையே தானும் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அப்போது கமல்ஹாசன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கமல்ஹாசன் அரசியலில் இன்னும் LKG-யில் கூட சேரவில்லை என்று விமர்சித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சுக்கு கமல்ஹாசனின் ரசிகர்களும், அரசியல் ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.