கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உடல்நிலையில் முன்னேற்றம்
லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து, 6வது மாடியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மயக்க மருந்தின் அளவு குறைக்கப்பட்டதால், நினைவு திரும்பி தன்னிடம் பேசிய டாக்டர்களிடம் சைகை காட்டியுள்ளார். தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை
எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 6வது மாடியில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் அறையில் ஸ்பீக்கர்கள் அமைத்து பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன. பாடல்களை கேட்பதால் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவார் என இசைப்பிரியர்கள் கூறினர்.