கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் வறுமையில் வாடுவதாகவும், தனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்றும் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யகாந்த்.
தவிக்கும் தொழிலாளர்கள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதனால் திரைத்துறையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகைகள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதில் சிலர் காய்கறி விற்பது, மளிகை பொருட்கள் விற்பது என்று அன்றாடம் தேவைப்படும் பொருட்களை விற்று தனது சம்பாத்தியத்தை பார்த்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேனளம் போன்ற சங்கங்கள், அன்றாடம் தேவைப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி வருகின்றன.
சாப்பாட்டிற்கே வழியில்லை
இருப்பினும், பல துணை நடிகர்கள் வேலை இல்லாத காரணத்தால் வறுமையில் வாடுவதாக கூறி வரும் நிலையில், ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சூரியகாந்த், தற்போது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது; பாக்யராஜ் தான் என்னை ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் அறிமுகப்படுத்தினார். பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக கார்த்தியின் கைதி படத்திலும், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்திலும் நான் நடித்தேன். தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். சர்க்கரை நோய் இருப்பதால் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். சர்க்கரை நோய்க்கு மருந்து வாங்கவே பணம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு யாராவது உதவி செய்யுங்கள். இவ்வாறு சூரியகாந்த் கூறியுள்ளார். நடிகர் சூரியகாந்தின் இந்த பதிவைப் பார்த்த பலர், அவரது நிலையை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.