கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை கவலைக்கிடம்
லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தன்னை விசாரிக்க யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், கூடிய விரைவில் வீடு திரும்புவேன் என்றும் கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அன்மையில் தெரிவித்தது. அவருக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், தீவிர அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீண்டு வருவான்
எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றிய செய்தியை கேட்ட சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் விதமாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். இது அனைவருக்கும் சற்று நிம்மதியை அளித்தது. எஸ்.பி.பி. குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும், நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான்.. காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜா உருக்கம்
இந்த நிலையில், எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரும், பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்றுசேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா!” இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உதவி
இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு, நடிகைகள் குஷ்பூ, ராதிகா, பாடகி சின்மயி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோரும் அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும், அதற்காக பிரார்த்திக்குமாறும் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.