மக்கள் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேசியக்கொடி ஏற்றிய முதல்வர்
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உழைத்துக்கொண்டே இருப்பேன்
அதன்பின் சுதந்திர தின உரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார். தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்றும் கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.6650 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.