தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஷாலு ஷம்மு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சர்ச்சை நாயகி
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் கமல்ஹாசனை சாடிய மீரா, திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் நடிகர்கள் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக பேசி மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் சூர்யாவும், விஜய்யும் பற்றி மீரா மிதுன் பேசியதற்கு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஷாலு ஷம்மு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக்த்தில் புகார் அளித்துள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் சர்மி (எ) ஷாலு ஷம்மு. இவர் நடிகை மீரா மிதுன் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தாருக்கு ஆதரவாக தான் கருத்து பதிவிட்டதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத மீரா மிதுன், தன்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், கடந்த சில தினங்களாக மீரா மிதுனின் ஆதரவாளர்கள் தனக்கு போன் செய்து முகத்தில் ஆசிட் வீசி விடுவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் புகார் கூறினார். தனது புகைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பான சில இணையதளங்கள் மற்றும் செயலிகளில் பதிவேற்றம் செய்து ஆபாசமாக கருத்துகளை பதிவிட்டு வருவதாக ஷாலு ஷம்மு கூறினார். எனவே மீரா மிதுன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.