விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேர ஆர்டர்கள் ஏதும் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள்.
பொம்மை செய்யும் தொழிலாளர்கள்
வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பலவிதமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, அவை பொதுமக்களின் வழிபாடுகளுக்காக வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு போதுமான ஆர்டர்கள் கிடைக்காததால், பல தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே களிமண்ணால் ஆன குதிரை, யானை உள்ளிட்ட பொம்மைகள், விளக்குகள், அலங்கார பொருட்கள் தயார் செய்வதில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகளவில் ஆர்டர்கள்
கார்த்திகை மாதத்தில் விளக்குசுட்டிக்கு பெரியளவில் ஆர்டர்கள் கிடைக்கும். அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்னதாக சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் செய்து தரக்கோரி பெரிய அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும். வழக்கமான பொருட்கள் செய்வதுடன் ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று அதிகளவில் சிலைகள் செய்வதன் மூலம் தொழிலாளர்கள் பலர் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கி, கணிசமான வருவாயும் ஈட்டி வந்தனர். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
வேதனையில் தொழிலாளர்கள்
ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஆர்டரும் கிடைக்காததால் தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வழக்கமான குதிரை, யானை பொம்மைகள் செய்வது, அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யும் பணியிலும் குறைந்த அளவிலான தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய தொழிலாளர்கள், வழக்கமாக செய்யும் பணிகளுடன் கார்த்திகை மாதத்திற்கான விளக்குசுட்டிகள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விநாயகர் சிலைகள் செய்ய ஆர்டர்கள் கிடைப்பது தங்களுக்குக் கூடுதல் வருமானமாக இருந்து வந்ததாக தெரிவித்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கும் என்று மக்கள் நினைப்பதால் விநாயகர் சிலைகள் செய்ய இதுவரை ஒரு ஆர்டர் கூட வரவில்லை என்று அவர்கள் வேதனையுடன் கூறினர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேரத்திலாவது சிலைகள் தயாரிக்க ஆர்டர் வராதா? என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.