தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், வால்பாறை, பரம்பிக்குளம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும், சோலையார், சின்கோனா, அவலாஞ்சி பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.