அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார். 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ந் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் தணியாததால், தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா தாக்கம் குறைந்ததும், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செங்கோடடையன் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரி திறப்பு இல்லை?
இதனிடையே, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே, கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆதலால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.