நடிகை வனிதா திருமண விவகாரத்தில் தலையிட்ட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டஈடு கேட்டு வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரமாரியாக திட்டிய வனிதா
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது எனத் தடாலடியாக பதில் அளித்தார் வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்புக் கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்ற போது லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவியது.
புகார், கைது
வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனைப் பார்த்துக் கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். இதனிடையே வனிதா – பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் வார்த்தைப் போர் மூண்டது. தன்னை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் ஆகியோர் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவியை மட்டும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
வனிதாவுக்கு நோட்டீஸ்
இந்தச் சூழலில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணும் அவரது கணவரும் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் வனிதா விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த Skype நேர்காணலின் போது வனிதா விஜயகுமார், என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கிப் பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயக்குமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறான வார்த்தைகளோடு பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயக்குமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாறி மாறி நோட்டீஸ்
கடந்த ஒரு வாரமாக வனிதா விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேவையில்லாமல் தனது திருமண விஷயத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் தலையிட்டு பேசி வருகிறார் என்றும் இதனால் தனக்கு 2.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் எனவும் வனிதா பதில் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.