பிரபல நடிகர் ராணா டகுபதி – மஹிமா திருமணத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு நிச்சயம் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிப்பில் வல்லவன்
பாகுபலியில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும், கைதட்டல்களையும் அள்ளிச் சென்றார் ராணா டகுபதி. பாகுபலி படம் மட்டுமல்லாமல் இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் ராணா ஹைதராபாத்தைச் சேர்ந்த மஹிமா பஜாஜ் என்பவரை காதலிப்பதாகவும், தனது காதலை மஹிமா ஏற்றுக்கொண்டதாகவும் சமீபத்தில் தனது சமூக வலை தளப்பக்கத்தில் அவர் பதிவிட்டார். 
திருமணம், கட்டுப்பாடு
இன்டீரியர் டிசைனரான மஹிமா, ட்யூ டிராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் காதலை ஏற்று, பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் பெருமளவு டிரெண்டாக வலம் வந்தது. இந்த நிலையில் கொரோனா பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத காரணத்தால் வருகிற 8 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ராம நாயுடு ஸ்டூடியோவில் ராணா – மஹிமா திருமணம் நடக்க இருப்பதாக கூறுகின்றனர். மிக நெருங்கிய சொந்தங்களும், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி நடிகர் ராணா டகுபதியின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது; “திருமணத்திற்கு 30 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். சானிடைசர், முகக்கவசம், சமூக இடைவெளி என்று அனைத்தும் பின்பற்றப்படும் எனக் கூறியுள்ளார்.















































