தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும் போது பாராதிராஜா தலைமையிலான புதிய சங்கம் தேவை தானா என தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சங்கப் பிரச்சனை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சில வருடங்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர இயக்குநர் பாரதிராஜா புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கினார். அச்சங்கத்திற்கு “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்” என பெயர் சூட்டினார். ஆனால் இப்போது அதிலும் ஒரு பிரச்சனை உருவாகியிருக்கிறது. புதிய சங்கங்கள் வேண்டாம் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக பாரதிராஜாவையே போட்டியின்றி தேர்வு செய்யத் தயார் என்றும் தயாரிப்பாளர்கள் கூட்டமாக அறிவித்துள்ளனர்.
சங்கத்தை கலைங்க
இதுதொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கருத்து தெரிவிக்கையில்; மறைந்த முன்னாள் முதல்வர்கள், “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது காலத்தில் தொடங்கப்பட்ட சங்கம் தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். தற்போதைய சூழ்நிலையில் பாரதிராஜா தவறு செய்யவில்லை. அவருடன் இருந்த 4 பேர் இந்த சூழலுக்கு அவரை தள்ளியுள்ளனர். வந்தால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவரைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்மீது அவ்வளவு மரியாதை வைத்துள்ளோம். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நாம் ஒன்றாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.
புதிய சங்கத்திற்கு எதிர்ப்பு
தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய சங்கம் தொடங்குவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்றும் பாரதிராஜா புதிய சங்கம் துவங்கியிருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சேகர் கேட்டுக் கொண்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கமே நஷ்டத்தில் இருக்கும் பொழுது புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி இருப்பது நியாயமல்ல என்று தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார். பாரதிராஜா புதிய சங்கம் தொடங்கியதற்கு தயாரிப்பாளர்கள் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.