நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக நாடு முழுவதும் இன்று ‘தேசிய கைத்தறி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
‘தேசிய கைத்தறி தினம்’
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக ‘சுதேசி இயக்கம்’ கடந்த 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் ‘தேசிய கைத்தறி தினம்’ கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தரமான கைத்தறிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், ‘இந்திய கைத்தறி முத்திரையை’ அறிமுகம் செய்து, ‘பிரயாஸ்’ எனும் புத்தகத்தையும் வெளியிட்டார்.
கைத்தறி ஆடைகளை அணியுங்கள்
தமிழக மக்கள் அனைவரும் தூய பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கைத்தறி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜவுளி தொழிலின் பல்வேறு உட்பிரிவுகளான நூற்பு பிரிவு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பதனிடுதல், பின்னலாடை, ஆயத்த ஆடை என அனைத்து பிரிவுகளிலும் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 இணை இலவச சீருடை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுவதாகவும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானியம் ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் தூயபட்டு, பருத்தி, கைத்தறி உற்பத்தி ரகங்களை வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
கிராமப் பொருளாதாரத்தின் தூண்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட, இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.