இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைதியாக நடந்த தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்படி இலங்கையில் 16வது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் பாதுகாப்பாக வாக்குகளை பதிவு செய்தனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதிபர் வாக்குப்பதிவு
அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு நகரின் புறநகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவரின் சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே, ஹம்பனோட்டாவில் உள்ள தனது சொந்த தொகுதியில் வாக்களித்தார். அம்பாரா, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அதிகமான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு
இந்நிலையில் நேற்று பதிவான வாக்குகள் அனைத்தும், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல்கட்ட முடிவு பிற்பகலுக்குப்பின் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்தா தேசப்பிரியா, கொரோனா வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் தேர்தல் அமைதியாக நடந்துள்ளது என்றார். 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இன்று பிற்பகலுக்குப்பின் முதல்கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இன்று இரவுக்குள் அல்லது நாளை காலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை
இதற்கிடையே, எஸ்.எல்.பி.பி. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், கோத்தபாய ராஜகபக்சேயின் சகோதரருமான பசில் ராஜபக்சே செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கள் கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று வரலாற்று வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் பொருளாதாரம் மீண்டும் வலுவடையும் எனவும் அவர் கூறினார்.