நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெருமளவு பேசப்பட்ட “கோலமாவு கோகிலா” திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நல்ல வரவேற்பு
2018 ஆம் ஆண்டு வெளிவந்து பெருமளவில் பேசப்பட்ட படம் ‘கோலமாவு கோகிலா’. நயன்தாராவுக்கு ஜோடியாக யோகி பாபு நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தவுடன் இப்படம் பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் கதை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயை காப்பாற்ற பல பேரிடம் உதவிக்காக சென்று நிற்கிறார் நயன்தாரா. ஆனால் யாரிடமும் உதவி கிடைக்காததால், போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார். பிறகு தாயை காப்பாற்றினாரா? போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பினாரா? என்பது மீதி கதை.
கன்னடத்தில் ரீமேக்?
தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததை முன்னிட்டு, ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆவதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தை மயூரா ராகவேந்திரா இயக்கப் போவதாகவும், கன்னடத்திற்காக கதைகளத்தில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில், ரசித்தா ராம் என்கின்ற சின்னத்திரை நடிகை நடிக்க உள்ளதாக ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. இதைப்பற்றி இயக்குநர் கூறுகையில்; “கோலமாவு கோகிலா படத்தை ரீமேக் செய்வதற்காக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கின்றோம். அதற்கான உரிமையை பெற்று, ஒப்பந்தம் கையெழுத்தான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். அப்போது நடிகர், நடிகைகள் மற்ற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக தெரிவிப்போம்” என்று கூறினார்.