இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
‘இந்தியன் 2’
3 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல இழுபறிகளுக்கு பிறகு, ஒரு வழியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்புடன் தொடங்கியது. ஆனாலும் பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், பிக்பாஸ் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பட்ஜெட் தொடர்பான பிரச்சனை நீடித்து வருவதாக சொல்லப்பட்டது.
ரூ.4 கோடி இழப்பீடு
இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததையைடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது. கொரோனா காலம் முடிந்து எப்போது திரையுலகம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என தெரியாத சூழலில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த ராமராஜனுக்கு 90 லட்சமும், சிறு காயமடைந்தவருக்கு 10 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியை லைகா நிறுவனம் ரூ.2 கோடி, கமல் மற்றும் இயக்குநர் சங்கர் தலா ரூ.1 கோடியும் வழங்கினர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இழப்பீடு தொகையை உரியவர்களிடம் வழங்கினர்.