தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் எனவும் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆலோசனை

கடந்த 29ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை’க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது. புதிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டுமென திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதினர். இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மும்மொழி கொள்கைக்கு இடமில்லை

இதனைதொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் இருமொழி கொள்கையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும் அளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here