மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்

உலகையையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். சிலர் மட்டுமே சிகிச்சையில் உள்ள நிலையில், ஒருசில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேச கேபினட் அமைச்சர் கமல் ராணி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

தொற்று உறுதி

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கொரோனா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் எனக்கு இருந்தன. இதையடுத்து, நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது எனது உடல்நிலை நலமாக இருக்கிறது. மருத்துவமனையின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தயவுசெய்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

ஆளுநருக்கு கொரோனா

இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநருக்கு லேசான அளவிலே தொற்று உள்ளதாகவும், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்கானிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here