கொரோனா தடுப்பூசி சோதனை முடிவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவின் வூஹான் நகரில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி எப்போது வரும் என உலக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
தடுப்பூசி தயார்
இந்த நிலையில், ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்துவிட்டதாக முதல் நாடாக ரஷ்யா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.