பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை சென்றுள்ளனர்.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் பீகார் போலீஸ்
சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து சுஷாந்த் மரண வழக்கை பாட்னா போலீசாரும் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் வழக்கில் மகாராஷ்டிரா காவல்துறை ஒத்துழைக்கவில்லை எனக் குற்றம்சாட்டி வந்த நிலையில், பாட்னா நகர காவல் கண்காணிப்பாளர் வினய்குமர் இன்று மும்பை புறப்பட்டுச் சென்றார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மதியம் சுஷாந்த் அறையின் கதவைத் திறக்க அவரது நண்பர் சித்தார்த் பிதானியால் அழைக்கப்பட்ட சாவி தயாரிப்பாளரை பாட்னா போலீசார் தேடி வருகின்றனர். அவர் கிடைத்தவுடன் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் பாட்னா போலீசார் தெரிவித்துள்ளனர்.













































