நல்ல கதைகளை தேர்வு செய்யும் அளவிற்கு தனக்கு பக்குவம் கிடைத்துவிட்டதாக நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
மாடல் அழகி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான டாப்ஸி, டெல்லியில் பிறந்தவர். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த டாப்ஸியின் தந்தை தில்மோகன் சிங் ஒரு தொழிலதிபர். தாய் நிர்மல்ஜித் பன்னு இல்லத்தரசி. பள்ளி நாட்களில் வாசிப்பதில் மிகவும் கைதேர்ந்த அவர், விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். எட்டு வயதிலிருந்தே நடிகை டாப்ஸி கதக் மற்றும் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சியும் பெற்றார். இது மட்டுமின்றி மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். டான்ஸ் பயின்றது மற்றும் மாடல் அழகியாக இருந்தது என இவை அனைத்தும் அவரை ஹீரோயின் ஆக்கியது.
தமிழில் அறிமுகம்
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்ஸி நாயகியாக அறிமுகமானார். அதில் வரும் “வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா இல்ல வெயிலுக்கு காட்டாமா வளத்தாங்களா” பாடல் வரிகள் டாப்ஸிக்கே எழுதியது போல அமைந்து இருக்கும். அந்த அளவிற்கு வெள்ளை மெழுகு சிலையாக இருந்தார் டாப்ஸி. தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் டாப்ஸியை மறக்க மாட்டார்கள் என்பதற்கு ‘கேம் ஒவர்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பே ஆதாரம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளியான “பிங்க்” திரைப்படத்தில் டாப்ஸியின் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.
திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் டாப்ஸி, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது; தனது 10 வருட சினிமா வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நான் நடித்துள்ளேன். நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகைகளில் பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளனர் ரசிகர்கள். தொடர்ந்து இரு மொழிகளிலும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியில் நான் நடித்த “பிங்க்” படம் எனது சினிமா வாழ்க்கையை மாற்றியது. அதன்பிறகு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்தன. நானும் அதுபோன்ற கதைகளை தேர்வு செய்வதில் பக்குவம் பெற்றேன். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மீண்டும் நடிக்கவுள்ளேன். இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை டாப்ஸிக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.