கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஐடி நிறுவன பெண் ஊழியருக்கு நடிகர் சோனு சூட் உதவிக்கரம் நீட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை 6ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் பலர் வருவாயின்றி தவித்து வரும் சூழலில், பல நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேலை இழக்கும் அவல நிலையும் ஏற்பட்டது.
உதவிக்கரம் நீட்டும் சோனு சூட்
இதுபோன்ற இக்கட்டான சூழலில் தவிக்கும் மக்களுக்கு, பிரபல நடிகர் சோனு சூட் தானாக முன் வந்து உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களை தனது செலவில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சில தினங்களுக்கு முன் ஆந்திரா மாநிலம் சித்தூரில் மாடுகள் இல்லாத காரணத்தால் ஒரு விவசாயி தனது இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுததை அறிந்து மனமுடைந்த அவர், அந்த விவசாயி குடும்பத்திற்கு ஒரு டிராக்டர் வாங்கித் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது ஐடி நிறுவனத்தில் வேலையிழந்த பெண்ணுக்கு உதவி புரிந்துள்ளார் சோனு சூட்.
ஹீரோவான வில்லன் நடிகர்
ஐதராபாத்தை சேர்ந்த சாரதா என்ற பெண், பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அந்த நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இருப்பினும் மனமுடியாத அப்பெண், காய்கறி விற்பனையில் இறங்கினார். அதிகாலை நான்கு மணிக்கே காய்கறி மார்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி, ஊருக்குள் விற்று வருகிறார். சமூக வலைத்தளம் மூலம் இதனை அறிந்த நடிகர் சோனு சூட், உதவியாளர் மூலம் சாரதாவை பார்த்து விசாரித்து, அவருக்கு பணி ஆணை வழங்கியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இந்த இக்கட்டான நேரத்தில், பலருக்கு உதவி செய்துவரும் நடிகர் சோனு சூட்டிற்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.