கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தலைமறைவாகியுள்ள யூடியூப் புகழ் சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வார்த்தைப் போர்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துகொண்டதாக பீட்டரின் முதல் மனைவி எலிசபத் ஹெலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, எலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், தன் பெயரில் தனி யூடியூப் சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். வனிதாவுக்கும் எலிசபத்துக்குமான பிரச்சனை, பின்னர் சூர்யா தேவிக்கும் வனிதாவுக்குமான பிரச்சனையாக மாறியது. அவர்களுக்குள் வார்த்தைப் போர் மூண்டது. சூர்யா தேவி தன்னைப் பற்றி அவதுாறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை வனிதா போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து சூர்யா தேவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
தலைமறைவு
சூர்யா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு கடந்த 23ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காவல் ஆய்வாளர் மற்றும் சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், சூர்யா தேவி தனது வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதனிடையே சூர்யாதேவி வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் கொரோனா இருப்பதாக வதந்தி பரப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தீவிரமாக தேடும் போலீஸ்
சூர்யாதேவியை தேடும் பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியதால், அவர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பேரிடர் மேலாண்மை சட்டம், தடை உத்தரவை மீறி செயல்படுதல், அனேக நபர்களுக்கு தொற்று நோயைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினருடன் போலீசாரும் இணைந்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சூர்யா தேவியை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.