கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த உலக அழகி ஜஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகியோர் பூரண குணமடைந்ததையடுத்து வீடு திரும்பியுள்ளனர்.
டாப் ஹீரோயின்
மாடலிங் துறையில் தன்னை முழுமையாக வலுப்படுத்தி, பின்னர் திரைத்துறையில் இணைந்து அதிலும் சாதனை படைத்தவர் நடிகை ஜஸ்வர்யா ராய். கடந்த 1994 ஆம் ஆண்டு இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேல்டு பட்டங்களை வென்றார். இதன்பின் திரைத்துறையில் கால் பதித்து, இன்று வரை சாதனை படைத்து வருகிறார். இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதையும் ஐஸ்வர்யா ராய் பெற்றுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
வீடு திரும்பிய ஐஸ்வர்யா
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. அதிலும் குறிப்பாக மும்பையில் நோய்த் தொற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் அமிதாப்பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 11 ஆம் தேதி அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து நடிகை ஜஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த அவர்கள் பூரண குணமடைந்ததையடுத்து வீடு திரும்பியுள்ளனர். இத்தகவலை அபிஷேக் பச்சன் தனது டுடிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப்பச்சனும், அபிஷேக் பச்சனும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.















































