சுஷாந்த் சிங் ராஜ்புத் மிகவும் கண்ணியமான மனிதர் என அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் கூறியுள்ளனர்.

மனம் கவர்ந்த நாயகன்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘தில் பெச்சாரா’ திரைப்படம், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்தார் சுஷாந்த். இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார் கதாநாயகியின் அம்மாவாகவும், அப்பாவாகவும் நடித்த நடிகர்கள். நாயகி சஞ்சனா சங்கியின் அம்மாவாக நடித்தவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. நடிப்பிலும், அழகிலும் தனது பகுதியை அம்சமாகவே நடித்துக் காட்டியிருந்தார் ஸ்வஸ்திகா முகர்ஜி.

வதந்திகளை பரப்பாதீர்

கடந்த சில நாட்களாகவே சுஷாந்த்தை பற்றி சில வதந்திகள் பரவி கொண்டிருக்கின்றன. அதாவது, சுஷாந்த் சிங் ‘தில் பெச்சாரா’ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்தார் சஞ்சனா. சுஷாந்தின் இறப்புக்கான உண்மையான காரணம் கண்டிப்பாக ஒருநாள் வெளியே வரும் என்றும் அதுவரையில் தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கண்ணியமான மனிதர்

சுஷாந்த் மீதான குற்றச்சாட்டை நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜியும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; சுஷாந்த் சிங் ராஜ்புத் மிகவும் நேர்மையானவர். அவர் புத்தகத்திலும், அறிவியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் தனது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பவர். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமல்ல, வேறு யாருடனும் தவறாக நடந்து கொள்ள மாட்டார். அவர் ஒரு கண்ணியமான நடிகர், கண்ணியமான மனிதர். மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு ஏதாவதொரு தவறு நடந்திருந்தால் அதே படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த எனக்கும் அது அசவுகரியமாக இருந்திருக்கக் கூடும். ஒரு பெண்ணாக நானும் அதனை உணர்ந்து இருக்கக்கூடும். ஆனால் அந்த மாதிரி எதுவும் இல்லாமல் நல்லபடியாக அந்தப் படத்தை நாங்கள் முடித்துக் கொடுத்தோம். ஒரு குடும்பம் மாதிரி தான் நாங்கள் அந்தப் படத்தில் நடித்தோம். உண்மையாகவே அவர் எனது மகனாகவே வாழ்ந்தார். இவ்வாறு ஸ்வஸ்திகா முகர்ஜி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here