முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி நடிகர் விவேக் தனது டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனவு நாயகன் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி விழுந்த அவர், மரணமடைந்தார். அப்துல்கலாமின் மரணச் செய்தி உலகையே உலுக்கியது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாக விளங்கினார். பலரும் அணு ஆயுதம் சோதனை நடத்த அச்சப்பட்ட போது, அப்துல்கலாம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பொக்ரான் அணு குண்டு சோதனையை நடத்தி இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்தார். எல்லோரையும் அரவணைத்து செல்லும் நபராக இருந்த அப்துல்கலாமை, குடியரசுத் தலைவராக்கப் பரிந்துரைத்தபோது எவரும் அவரை வேண்டாம் என்று சொல்லவில்லை. இளைஞர்களுடனும், மாணவர்களுடன் பலமுறை கலந்துரையாடிய அப்துல் கலாம், அவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தார்.
சின்னக் கலைவானார் விவேக்
தனது காமெடியால் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பவர் நடிகர் விவேக். திரைப்படங்கள் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை, ரசிகர்களுக்கும், மக்களுக்கும் புரியும் மொழியில் வழங்குவது விவேக்கின் ஸ்பெஷல். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகர் ஆவார். அவரைப் போலவே சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் விவேக், பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் சேவையை தானே முன்வந்து செய்கிறார். தற்போது வரை சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்துள்ளார். பலருக்கும் கிடைக்காதது ஒன்று இவருக்கு கிடைத்தது. நடிகர் விவேக் ஒருமுறை அப்துல்கலாமை பேட்டி எடுத்தார். அது தற்போதுவரை பலரால் ரசிக்கபடும் பேட்டிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
விவேக் உருக்கம்
ஜந்து வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவு மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இன்று அவரது நினைவு நாளையொட்டி பலரும் அப்துல்கலாமை நினைவுப்படுத்தி, அவருடன் பழகிய தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவர் மீது மரியாதை மற்றும் மிகுந்த பற்று கொண்டுள்ள நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிந்துள்ளார். “நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில்.. ஆனால்… கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில்!! அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது!!உங்கள் கனவில் நாங்கள்! எங்கள் நினைவில் நீங்கள்! “என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.