இந்திப் படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருப்பது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா அரசியல்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த்தின் மரணத்திற்கு சினிமா பின்புலம் உள்ளவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை சிலர் தட்டிப்பறித்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சினிமா பின்புலம் உள்ளவர்கள் சினிமாவை ஆட்சி செய்வதாகவும், சினிமா அரசியல் அதிகமாக செய்தாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் சிலரும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல மேடை நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் உதாசீனப்படுத்தபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டது.
அதிர்ச்சி தந்த ரஹ்மான்
அதில், நடிகர் சல்மான் கான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை உதாசீனப்படுத்திய வீடியோ ஒன்று பலரால் கவனிக்கப்பட்டது. இதனை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு, இந்திப் படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுவதாக ஏ.ஆர். ரஹ்மான் பேசிய விஷயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன். ‘தி பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள் என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். அனைவரையுமே நான் வரவேற்கிறேன். இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
தட்டிப் பறிக்கும் கும்பல்
உலக அளவில் ரஹ்மான் என்றால் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. அதேபோல் அவர் இசையமைக்கும் பாடல்களும் அனைவரும் ஈர்க்கும் வகையில் இருக்கும். ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர். ரஹ்மான், சினிமா அரசியலை பற்றியும், அதனால் அவர் பாதிக்கப்பட்டதை பற்றயும் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கிட்டத்திட்ட 28 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் பணியாற்றி வரும் ஏ. ஆர். ரஹ்மானே, இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று பல தரப்பிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தென்னிந்திய – வடஇந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை விரும்பாத கும்பல், ரஹ்மானுக்கு கிடைக்கும் நல்ல பட வாய்ப்புகளை தட்டிப் பறித்துக் கொண்டே தான் இருந்துள்ளது.