கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கப்பணத்தையும், ஒரு கிலோ தங்க நகைகளையும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தல்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்தத் தூதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலைக் கடந்த மாதம் 30ம் தேதி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில், ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி. துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா, தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்வப்னா சுரேஷ் கைது
இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, என்ஐஏ அமைப்பினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களை விசாரிக்க என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டதால், அவர்கள் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ரிமாண்ட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு வங்கிகளில் உள்ள லாக்கரில் பணமும், நகைகளையும் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அதனடிப்படையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஸ்வப்னா சுரேஷ் லாக்கரில் வைத்திருந்த ரூ.36.50 லட்சம் பணம், ஸ்வப்னாவுக்கு சொந்தமான மற்றொரு வங்கி லாக்கரில் இருந்து ரூ.64 லட்சம் பணம், ஒரு கிலோ தங்க நகை ஆகியவற்றை கடந்த 23ம் தேதி பறிமுதல் செய்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் நாயர், ஸ்வப்னா இருவரையும் ஜாமீனில் அனுப்பினால், ஆதாரங்களை அழிக்க நேரிடும், தலைமறைவாகிவிடுவார்கள். விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும், ஸ்வப்னா சுரேஷிடம் இருந்து பல்வேறு டிஜி்ட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இன்னும் கூடுதலாக நாட்கள் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையைப் பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 21ம் தேதி வரை சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது.