சூர்யா தேவி கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நடிகை கஸ்தூரி சட்டப்படி அவரை காப்பாற்றப் போவதாக சூளுரைத்துள்ளார்.

வார்த்தைப் போர்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துகொண்டதாக பீட்டரின் முதல் மனைவி எலிசபத் ஹெலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் தனக்கு வேண்டும் எனவும் எலிசபெத் திட்டவட்டமாக கூறினார். இதனிடையே, எலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், தன் பெயரில் தனி சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். வனிதாவுக்கும் எலிசபத்துக்குமான பிரச்சனை, பின்னர் சூர்யா தேவிக்கும் வனிதாவுக்குமான பிரச்சனையாக மாறியது. இதன் உச்சகட்டமாக இருவரும் சரமாரியாக தாக்கிப் பேசினர்.
சூர்யா தேவி கைது
சூர்யா தேவி தன்னைப் பற்றி அவதுாறு பரப்புவதாக போரூர் காவல் நிலையத்தில் நடிகை வனிதா புகார் அளித்தார். அதேபோல் வனிதா மீது சூர்யா தேவியும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த வியாழக்கிழமை இருவரையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இருவரையும் சமாதானமாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சமாதானமாக செல்ல சூர்யாதேவி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வனிதா அளித்த கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் சூர்யா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அறிந்த வனிதா, மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்படி நடவடிக்கை
இதனிடையே சூர்யா தேவி கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த நடிகை கஸ்தூரி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கஸ்தூரி, தங்கள் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை சட்டப்படி சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். சூர்யா தேவியை காபாற்றுவதே தனது முதல் வேலை எனவும், அதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். வனிதா புகார், சூர்யா தேவி கைது, கஸ்தூரி சூளுரை என இவர்களது விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.















































