மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான ‘தில் பெச்சாரா’ நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், தற்போது இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு இசை அஞ்சலி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் மரணம்
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட்டின் இளம் நடிகரான இவர், கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணச் செய்தி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரிடியாய் அமைந்தது. அவரது மறைவு பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின. இதுதொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சினிமா பின்புலம் உள்ள நடிகர், நடிகைகளால் தான் சுஷாந்த் உயிரிழந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இசை அஞ்சலி
சுஷாந்த் சிங் கடைசியாக நடித்தப் படம் ‘தில் பெச்சாரா’. ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை முகேஷ் சாப்ரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜூலை 24ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரபல பாடகர்களுடன் இணைந்து ‘தில் பெச்சாரா’ என்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் உள்ள தனது ஸ்டுடியோவில் இருந்தும், இவருடன் பாடகர்கள் ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், மோஹித் சவுகான், ஹிரிடே கட்டானி, சுனிதி சவுகான் உள்ளிட்டோர் அவர்களின் வீடுகளில் இருந்தும் கலந்துகொண்டனர். சுஷாந்த் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஏ.அர். ரஹ்மான், ‘தில் பெச்சாரா’வின் இசை தனக்கு எப்போதும் விசேஷமாக இருக்கும் என்றும் இப்படத்திற்காக தான் இயற்றிய ஒன்பது பாடல்களும் ஒரு புதிய அர்த்தத்தையும், வாழ்க்கையையும் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.