சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் செங்கத்தில் 10 செ.மீ. மழையும், கரூரில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஊத்தங்கரை, சாத்தனூர் அணை, வால்பாறை, கோபிசெட்டிபாளையத்தில் தலா 7 செ.மீ. மழையும், மன்னார்குடி, வெட்டிக்காடு பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மரண்டஹள்ளி, நாகப்பட்டினம், பள்ளிப்பட்டு, திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், காரைக்கால், கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 20 மற்றும் 21ம் தேதிகளில் குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.