புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, பிற நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.896 கோடியும், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு ரூ.864 கோடியும் நிதி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அறிவிப்புகள்
முதல்வர் நாராயணசாமி மேலும் கூறியதாவது;
*வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் வரி ரத்து செய்யப்படும். 100 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மின்சார வரி ரத்து செய்யப்படும்.
*புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர்.
*கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15-ந்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும்.
*வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.
*ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும்.
*அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் வழங்கப்படும்.
*ரூ. 4 கோடி செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படும்.புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
*நெல், சிறுதானியம் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு மானியம் வழங்கப்படும்.போன் செய்தால் வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். மாடித்தோட்டத்திற்கு 75% வழங்கப்படும்.
*இந்திரா காந்தி பெயரில், மருத்துவ காப்பீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
எதிர்கட்சிகள் வெளிநடப்பு
முதலமைச்சர் நாராயணசாமியின் அறிவிப்புகள் புதுச்சேரி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், முதன்முறையாக புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கப்பட்டு முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் அனுமதி இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. என்.ஆர். காங்கிரஸ், அதிமுக மற்றும் நியமன பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.