அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள காசிரங்கா வன உயிரியல் பூங்காவில் வெள்ளம் சூழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன.
கொட்டித் தீர்க்கும் கனமழை
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
விலங்குகள் உயிரிழப்பு
தொடர் கனமழை காரணமாக அங்குள்ள காசிரங்கா உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியது. இதில் சிக்கி 9 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. காசிரங்கா பூங்காவின் 80 சதவீதப் பகுதி இன்னும் வெள்ளத்தில் மூழ்கியே காணப்படுகிறது. வெளியேறிச் சென்ற காண்டாமிருகங்கள் மீட்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 136 விலங்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன. வெள்ளம் வடியத் துவங்கியிருப்பதால் விலங்குகளின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.