திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிவிப்பில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.