கன்னட நடிகர் கிச்சா சுதீப் கொரோனா வைரஸ் பாதிப்பு காலகட்டத்தில் நான்கு அரசு பள்ளிகளை தத்தெடுத்து தன்னால் ஆன உதவிகளை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிநய சக்ரவர்த்தி
கன்னட திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் கிச்சா சுதீப். கர்நாடகாவில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருப்பதால், சுதீப்பின் படங்கள் அனைத்தும் அங்கு பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடகர் என பன்முகதன்மை கொண்டுள்ளார் சுதீப். தயவா என்ற கன்னட படம் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கிய அவர், பிறகு ஹூச்சா, நந்தி, சுவாதி முத்து என வரிசையாக நடித்து சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். அங்கு எத்தனை நடிகர்கள் புதுமுகங்களாக வந்தாலும், சுதீப்பை வீழ்த்த யாரும் இல்லை. சுதீப் கன்னட திரையுலகில் நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழில் தலைகாட்டி வருகிறார். ராஜமெளலி இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதன்பின் தமிழில் பாகுபலி, புலி, முடிஞ்சா இவன புடி, கடந்த வருடம் பயில்வான், சைரா நரசிம்ம ரெட்டி என அதிக படங்கள் நடித்தார். சுதீப் பிரபல கன்னட ரீயாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பலமுறை தொகுத்து வழங்கியுள்ளார்.
சுதீப் செய்த செயல்
சுதீப் சத்தம் இல்லாமல் அவ்வப்போது பல உதவிகளை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு காலகட்டத்தில் அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் பலருக்கு உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அங்கு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் சுதீப். மாணவர்கள் பாடம் கற்பதற்காக பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் பல தன்னார்வலர்களை நியமித்து பள்ளிகள் எப்படி நடக்கின்றன என்றும் மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்து அந்த உதவிகளையும் செய்தும் வருகிறார். பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் மாணவர்களின் ஸ்காலர்ஷிப் விஷயங்களையும் தானே பார்த்து கொள்கிறாராம் சுதீப். இதுபோன்ற ஒரு நல்ல உதவியை சுதீப் செய்து வருவது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளதுடன், பலரும் பாராட்டி வருகின்றனர்.