மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவ் சார்ஜா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுனின் மருமகன்
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜுன். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தமிழ் மட்டுமின்றி கன்னட மொழி படங்களில் கூட அதிகம் நடித்துள்ளார் அர்ஜுன். இவரது மருமகன் தான் துருவ் சார்ஜா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கன்னட திரையுலகில் நடித்து வருகிறார். இவர் தனது நீண்ட நாள் தோழியான பிரேரானாவை திருமணம் செய்துகொண்டார்.
அண்ணன் இறந்த தருணம்
கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி துருவ்வின் அண்ணன் சீரஞ்சிவி சார்ஜா உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தார். நடிகை மேக்னா ராஜின் கணவரான சீரஞ்சீவி சார்ஜாவின் மறைவை அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. அண்ணன் இறந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் துருவ் சார்ஜாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அதுரி என்ற திரைப்படம் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமான துருவ், அப்படத்திற்காக பல விருதுகளை பெற்றார். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாக இருந்த “பொகுரு” திரைப்படம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரைக்கு வராமல் தள்ளிப்போயுள்ளது. அப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் துருவ் ஆடிய ஆட்டத்தை, கன்னட திரையுலக ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இதனிடையே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துருவ் சார்ஜா, தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாங்கள் மருத்துவமனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு சிறிய அறிகுறிகள் உள்ளதாக கூறிய அவர், கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளார். தங்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். துருவ் சார்ஜாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள், அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பாலிவுட் நடிகர்களான அமிதாப் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கன்னட திரையுலக நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















































