சன் டிவியில் ஒரே நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி வந்த 4 சீரியல்களை நிறுத்த முடிவுவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீரியல்களுக்கு பதிலாக விரைவில் புதிய சீரியல்களுடன் களமிறங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர், நடிகைகள் தயக்கம்
பல சேனல்களில் விதவிதமான சீரியல்கள் வரிசைக்கட்டி வந்தாலும், மக்கள் மனம் கவர்ந்த பல சீரியல்களை ஒளிபரப்பிய பெருமை சன் டிவியையே சேரும். சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் 6 ஆண்டுகளை கடந்தும் ஓடியிருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. பின்னர் சில ஊரடங்கு தளர்வுகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியல் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பல வெளியூர் நடிகர் – நடிகைகள் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் உடல்நிலை சரியில்லாத பலர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
சீரியல்கள் நிறுத்தமா?
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீரியல் வட்டாரத்தில் விசாரித்தபோது; ’கொரோனா வைரஸ் பாதிப்பு தான் தற்போதைய இந்தப் பிரச்சனைக்குக் காரணம். சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் மும்பை, கேரளா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வர வேண்டும். அவர்களின் வருகையில் பிரச்சனைகள் இருக்கிறது. அப்படியே வந்தாலும், அவர்களுக்கு கேரவன், படப்பிடிப்பில் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் நிறையச் சிக்கல்கள் எழுந்தன. எப்படிப் பார்த்தாலும் இந்தச் சூழலை, சீரியல்கள் தயாரிப்புக்குழு எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
தொடரும் குழப்பம்
சில வாரங்களுக்கு முன் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்த போது எடுக்கப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த பலர், ஷூட்டிங் வர இயலாத காரணத்தால் கதாபாத்திர மாற்றமும் செய்யப்பட்டது. அதுவும் சரிவரப் பொருந்தவில்லை. குறைந்தபட்சமாக 20 பேர் வேலை செய்தால் தான், சீரியல்களின் படப்பிடிப்பு நடைபெறும் என்பதாலும், பாதுகாப்பு பற்றி எந்த உறுதியும் இல்லை என்பதாலும் பல நடிகர்கள் பின்வாங்கி இருக்கின்றனர். அதிலும் பழைய எபிசோட், புதிய எபிசோட் என குழப்பத்துடனே சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால், பிரச்சனை உள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனமும், சேனலும் ஒருங்கிணைந்து தற்போது இந்த சீரியல்களை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளோம்.
இல்லத்தரசிகள் சோகம்
இதற்குப் பதிலாக 5க்கும் மேலான புதிய சீரியல்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். எப்படியும், கொரோனா பாதிப்பு குறைந்து செப்டம்பர் மாதத்துக்குப் பிறகுதான் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு தினமும் வருவார்கள். ஆகையால் அதுவரை சீரியல் சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் செய்வது என்பது சிரமம் தான் என்று சீரியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே இல்லத்தரசிகளின் மனம்கவர்ந்த சீரியல்கள் தினமும் ஒளிபரப்பாமல் இருப்பது அவர்களை வேதனையில் ஆழ்த்தியிருந்தது. இப்போது இந்தச் செய்தி இல்லத்தரசிகளுக்கு மேலும் சோகமானதாக மாறிவிட்டது. இருப்பினும் அதே குழுவுடன் புதிய சீரியலை தொடர சன் டிவி திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.